டிரெண்டிங்

26 ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் மோடி

webteam

மே26 ஆம் தேதி குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருகிறார்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது. 

இந்நிலையில் வரும் 26ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மோடி ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்றைய தினமே மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக, டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் செல்லவுள்ளதாகவும் அங்கு கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.