டிரெண்டிங்

“மிஸ்டர் காலாவதியான பிரதமர்...” - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி

“மிஸ்டர் காலாவதியான பிரதமர்...” - மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி

rajakannan

ஃபோனி புயல் குறித்து பேசுவதற்காக விடுக்கப்பட்ட தன்னுடைய அழைப்பை ஏற்கவில்லை என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தின் தாம்லுக் பகுதியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஸ்பீட் பிரேக்கர் திதி, ஃபோனி புயல் விவகாரத்தில் அரசியல் செய்கிறார். மேற்குவங்க மாநிலத்தில் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிய மம்தா பானர்ஜிக்கு போன் செய்து பேச முயற்சித்தேன். ஆனால், அவருடைய ஆணவம் காரணமாக அவர் என்னிடம் பேசவில்லை. அவர் திரும்பி எனக்கு போன் செய்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. மேற்குவங்க மக்கள் மீதான கவலையால் மம்தாவுக்கு நான் மீண்டும் போன் செய்தேன். ஆனால், அவர் பேச மறுத்துவிட்டார்” என்று கூறினார்.

ஆனால், பிரதமர் மோடியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார். “முதலமைச்சர் இல்லாமல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை எப்படி நீங்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கலாம்?. மேற்குவங்கத்தில் இந்த நாடகத்தை நிகழ்த்தாதீர்கள். மிஸ்டர் காலாவதியான பிரதமர், நீங்கள் பிரதமராக இருக்க தகுதியற்றவர். உங்களுடைய அனுதாபம் எங்களுக்கு தேவையில்லை.

கலைகுன்டாவுக்கு பிரதமர் வந்தடைந்த பிறகுதான் ஆலோசனைக் கூட்டம் குறித்து மேற்குவங்க அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஃபோனி புயல் குறித்த பிரதமரின் போன் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. ஏனெனில், காலாவதியான பிரதமரிடம் நான் எதனையும் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.