டிரெண்டிங்

விளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு!

விளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு!

rajakannan

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தன்னுடைய அரசின் நலத்திட்டங்களை விளம்பரம் செய்வதற்காக ரூ.4,343 கோடி செலவிட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் அனில் கல்காளி இந்த மனுவை தாக்கல் செய்தார். 

அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் மட்டுமல்லாமல், அதனை தாண்டி வெளியிலும் பல்வேறு வகையில் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களுக்கு இத்தகைய செலவுகள் ஆனதாக ஆர்.டி.ஐ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சு ஊடகத்தில் செய்திதாள்கள், மாத, வார இதழ்கள் உள்ளிட்டவை அடங்கும். அதேபோல், எலக்ட்ரானிக் ஊடகங்களில் தொலைக்காட்சிகள், ரேடியோ, டிஜிட்டல் சினிமா உள்ளிட்டவை அடங்கும். அச்சு ஊடகத்திற்கு ரூ.1732.15 கோடி, எலக்ட்ரானிக் ஊடகத்திற்கு ரூ.2079.87 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதனை தாண்டி ரூ.531.24 கோடி செலவிடப்பட்டுள்ளது. 

ஆண்டுவாரிய விளம்பர செலவு (ஏப்ரல்-மார்ச்):

2014-15 -- ரூ.953.54 கோடி
2015-16 - ரூ.1,171.11 கோடி
2016-17 -- ரூ.1,263.15 கோடி
2017-18 -- ரூ.955.46 கோடி

மனுதாரர் கல்களி, “பெறப்பட்ட தகவல்களை ஆய்வு செய்ததில், விளம்பத்திற்காக அதிக செலவுகள் செய்யப்படுவதாக விமர்சனங்கள் எழுந்ததை அடுத்தை, கடந்த நிதியாண்டில் அரசு செலவை குறைத்துள்ளது” என்று கூறினார்.