டிரெண்டிங்

பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை முதலமைச்சர் மறுக்காதது ஏன்? - ஸ்டாலின் கேள்வி

webteam

பிரதமரை சந்திக்க தமிழக அரசு அனுமதி கேட்கவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை முதலமைச்சர் மறுக்காதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் காவிரி உரிமை மீட்பு பயணத்தை ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் போது ஆங்காங்கே மக்களிடம் கருத்துக்களை அவர் பகிர்ந்து வருகிறார். இதற்கிடையே செய்தியாளர்களையும் சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்கிவருகிறார். அதன்படி, மீட்புப் பயணத்தின் 4-வது நாளான இன்று திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். 

அப்போது, பிரதமரை சந்திக்க தமிழக அரசு முயற்சிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், இதற்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவிக்காது ஏன்? என கேள்வி எழுப்பினார். விளக்க மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது, தமிழர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார். இனியாவது பிரதமரை சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.