டிரெண்டிங்

“தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி” - ஸ்டாலின் கருத்து

“தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி” - ஸ்டாலின் கருத்து

rajakannan

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

18 எம்.எல்.ஏக்கள் வழக்கு கடந்த 9 மாதங்களாக நீடித்து வந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் வழக்கு மேலும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் தீர்ப்பு அளித்த பின்னர் தான் இந்த வழக்கு முடிவுக்கு வரும். ஏற்கனவே தீர்ப்பு காலதாமதமாகி உள்ளதாக கருதி வந்த நிலையில், மேலும் கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு குறித்து ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பு குறித்து திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி கூறுகையில், “தமிழ்நாட்டின் ஜனநாயகம் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது; பிழைக்குமா, பிழைக்காதா என்பது பிறகே தெரியும்” என்றார்.