டிரெண்டிங்

8 வழிச்சாலை மேல்முறையீட்டை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

8 வழிச்சாலை மேல்முறையீட்டை திரும்ப பெற ஸ்டாலின் வலியுறுத்தல்

rajakannan

8 வழிச்சாலை திட்டத்திற்காக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செய்த மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

8 வழிச்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையப்படுத்தும் பணிக்கு எதிராக 50க்கும் அதிகமான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. விசாரணைக்கு பின், 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டது. 

மேலும், திட்டத்திற்காக ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. அதனை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டத்திற்காக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு செய்த மேல்முறையீட்டை திரும்பப் பெற வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்று அவர் கூறியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பாஜக அரசு இனியும் விபரீத விளையாட்டு நடத்தாமல் மேல்முறையீட்டை திரும்ப பெற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.