டிரெண்டிங்

ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க.அழகிரி

ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது: மு.க.அழகிரி

Rasus

மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் திமுக வெற்றி பெறாது என்றும், அவருடன் இருப்பவர்களின் செயல்பாடு சரியில்லை எனவும் மு.க.அழகிரி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு திமுக தோற்றது ஏன்..? இதற்கு மேல் என்ன வேண்டும்..? கருணாநிதி ஆக்டிவாக இருக்கும் வரை அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றோம். ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றாலும் கூட ஒரு போட்டி இருந்தது. டெபாசிட் இழக்கும் வரை சென்றிருக்கிறது என்றால் அந்த அளவிற்கு மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். புதிதாக வந்த அதிமுக, மதிமுகவினருக்கு பதவி வழங்கப்படுகிறது. அதுதான் டெபாசிட் இழக்க காரணம். ஸ்டாலின் ஊர் ஊராக சுற்றிக்கொண்டுத் தான் இருக்கிறார். அவர் இருக்கும் வரை எதுவும் சரியாக இருக்காது. ஏனென்றால் அவர் பக்கத்தில் இருப்பவரெல்லாம் அப்படி. எந்தக் கட்சியும் தோல்வியை ஒத்துக்கொள்ளாது. திமுகவினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டதாக துரைமுருகன் கூறியது தவறு. காலங்காலமாக கட்சிக்கு உழைத்த கட்சிக்காரர்களுக்கு அது எவ்வளவு வேதனையை ஏற்படுத்தும்..?. இதுதான் என் குமுறல்” என்றார்.

மேலும், “உண்மை தொண்டர்களுக்கும் இந்த மனநிலைதான் இருக்கும். கட்சி தொண்டனுக்காக நான் கேள்வி கேட்டேன். அதனால் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டேன். ‘தம்பி வா.. தலைமையேற்க வா..’ என ஒருத்தர் மட்டும் கூப்பிட்டால் போதாது. திறமை வேண்டும். மாறுதல் தேவை. வேலை பார்க்க வேண்டும். வேனில் ஏறி வாக்கு கேட்டால் மட்டும் ஓட்டு போட மாட்டார்கள். கருணாநிதி போல களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். தினகரன் தொடக்கம் முதலே களப்பணி செய்து ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றிருக்கிறார். இரட்டை இலை, உதயசூரியன் தோற்கும் அளவுக்கு களப்பணி செய்திருக்கிறார் தினகரன். பணம் கொடுக்காமல் தேர்தலில் வெற்றிபெற முடியும். களப்பணி செய்தால் வெற்றி நிச்சயம். துரோகம் செய்தவர்களுக்கு பதவி கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே திமுக வளர்ச்சியடையும். பல்வேறு மாநிலங்களில் எதிர்பார்க்காத பலர் ஆட்சியை அமைக்கிறார்கள். நான் கட்சியில் தவறேதும் செய்யவில்லை. அதனால் மன்னிப்பு ஏதும் கேட்க தேவையில்லை. வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் திமுகவில் மாற்றம் தேவை” என தெரிவித்தார்.