டிரெண்டிங்

"அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை"-புதுவை பேரவையில் ஆளும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசம்!

"அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை"-புதுவை பேரவையில் ஆளும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசம்!

webteam

”புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கு அதிகாரமில்லை” என பேரவையில் உறுப்பினர்களின் காரசார வாக்குவாதத்திற்கு பிறகு முதல்வர் ரங்கசாமி வேதனையை வெளிப்படுத்தினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் காரசார விவாதம்!

புதுச்சேரியில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இன்றை அலுவலின் கேள்வி - பதில் நிகழ்வில் புதுச்சேரியில் அரசு அதிகாரிகளை பணி உயர்வு செய்ய தலைமை செயலாளர் தொடர்ந்து தடையாக உள்ளார் என உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் எடுத்துரைத்தார்கள்.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஆவேசம்!

குறிப்பாக, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உரிய மரியாதையை தலைமை செயலாளர் கொடுப்பதில்லை. அதற்கு உறுதியான முடிவெடுங்கள். இல்லையெனில் சபாநாயகர் இருக்கையில் தலைமை செயலாளரே அமரட்டும்” என ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ரமேஷ் ஆவேசத்துடன் பேசினார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் குற்றச்சாட்டு!

”புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை. மத்தியில் இருந்து வரும் தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள் அமைச்சர்களை மதிப்பதில்லை” என பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சிவாவும் குற்றஞ்சாட்டினார்.

முதல்வர் ரங்கசாமி வேதனை!

தொடர்ந்து அனைத்து உறுப்பினர்களும் இதையே வலியுறுத்த குறுக்கிட்ட முதல்வர் ரங்கசாமி, “ அதிகாரிகள் பதவி உயர்வுக்கு நான் கோப்பு அனுப்பினால் தலைமை செயலாளர் அதை திருப்பி அனுப்புகின்றார், யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என எதிர்கட்சி தலைவருக்கு தெரிந்தும் பேசுகிறார்”  என்று அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லாதது குறித்து முதல்வர் ரங்கசாமி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

சமாதானப்படுத்திய சபாநாயகர்!

இதனைத்தொடர்ந்து பேரவையில் பேசிய சபாநாயகர் செல்வம், ”அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் முதலமைச்சர் ரங்கசாமி வேதனையடைந்துள்ளார். தலைமை செயலாளரின் ஒத்துழைப்பு கவலையளிக்கின்றது. ஆகவே, அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டத்தை கூட்டி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரத்தை மீட்டெடுப்போம்” என சபாநாயகர் பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார்.