டிரெண்டிங்

ஜல்சக்தி முதல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பங்கேற்பு

ஜல்சக்தி முதல் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பங்கேற்பு

webteam

குடிநீர் பிரச்னையை தீர்வு காண்பதற்கான மத்திய "ஜல்சக்தி" துறையின் முதல் ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் சார்பில் அமைச்சர் எஸ்பி வேலுமணி கலந்து கொண்டுள்ளார். 

குடிநீர் ஆதாரங்களை பாதுகாத்து மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு உயர்தர நீர்ப்பாசன வசதிகளை உறுதி செய்வதற்காக ஜல்சக்தி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதற்காக, மோடியின் அமைச்சரவையில் ஜல்சக்தி துறை தனியாக உருவாக்கப்பட்டு, அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டார். 

இந்த அமைச்சகத்தின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில நீர்வளத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் சார்பில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். 

கூட்டத்தில் தங்களுடைய மாநிலத்தின் குடிநீர் பிரச்னை சம்பந்தமாக மத்திய அமைச்சர்களிடம் மாநில அமைச்சர்கள் எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவிக்‌கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பாகவும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

இதனிடையே தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தார்‌. அப்போது கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கூட்டு குடிநீர் திட்டம், மழைநீர் சேகரிப்பு திட்டம், குடிநீர் திட்டங்களை புனரமைத்தல் ஆகிய பணிகளுக்கு 5 ஆயிரத்து 398 கோடி ரூபாய் நிதி வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை மனு அளித்தார். 

மேலும் கிராம பஞ்சாயத்துகளில் குறு கழிவு மேலாண்மை மையங்கள் அமைக்க 300 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் எஸ் பி வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.