தமிழ்நாடு சங்கங்கள் பதிவு கட்டணத்தை திருத்தி, 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 4 ஆயிரமாக உயர்த்துவதற்கான சட்டதிருத்த மசோதாவை அமைச்சர் வீரமணி சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்தார். மேலும், பத்திரப்பதிவு மூலம் வருவாய் அதிகரிக்கும்போது கட்டணம் குறைக்கப்படும் என்றும் அவர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு கட்டணமானது, கடைசியாக 2011 ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. தற்போது வசூலிக்கப்படும் கட்டணங்கள் பதிவு துறையால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு நிகராக இல்லாததால் அதனை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் கருதி, தமிழ்நாடு சங்கங்கள் பதிவு கட்டணத்தை திருத்தியமைப்பதற்கு இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது.
சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ராமர், உயர்த்தப்பட்ட பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் வீரமணி, பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை ஏற்று நிலங்களின் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டதாகக் கூறினார். பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறிய அமைச்சர், பத்திரப்பதிவு வருவாய் குறைந்து விடும் என்பதால் பதிவுகட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறினார். வரும் காலங்களில் வருவாய் அதிகரிக்கும்போது, தமிழக அரசு பதிவு கட்டணத்தை குறைக்கும் என்று அவர் உறுதியளித்தார்.