டிரெண்டிங்

தங்கத்தமிழ்செல்வன் பேச தடை போட்டுள்ளார் டிடிவி தினகரன் - தங்கமணி விமர்சனம்

webteam

டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள செந்தில்பாலாஜி, முதலமைச்சராகும் கனவில் உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை பற்றி தவறான தகவலை கூறியுள்ளதாக தெரிவித்தார். செந்தில் பாலாஜி முதலில் திமுகவில் இருந்தார், பின்னர் சசிகலா குடும்பத்தினரை பிடித்து அதிமுகவுக்கு வந்து, செந்தில்குமார் என்ற பெயரை செந்தில்பாலாஜி என மாற்றிக்கொண்டதாக அவர் கூறினார். 2006 சட்டசபை தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா தனக்கு வாய்ப்பு அளித்ததாகவும், சசிகலா குடும்பத்தின் ஆதரவுடன் கரூரில் செந்தில்பாலாஜி வேட்பாளரானவர் என்றும் சுட்டிக்காட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், “18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. எனக்கு தெரிந்த ஒரு தகவலை கூறுகிறேன். அதை செந்தில்பாலாஜி மறுக்கமுடியுமா? செந்தில்பாலாஜி தற்போது டிடிவி அணியில் வேகமாக இருக்கிறார். ஏன் என்றால் விரைவில் டிடிவி தினகரன் ஜெயிலுக்கு போய்விடுவார். அதனால் என்னை முதல்வராக்குங்கள் என மத்திய அரசில் சிலரை தொடர்பு கொண்டு அவர் பேசிவருகிறார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. இதை இல்லை என மறுத்து அவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சத்தியம் செய்ய தயாரா? டிடிவி தினகரனை எதிர்த்து அங்கு யாரும் பேசமுடியாது. தங்கதமிழ்செல்வன் டிவியில் பேட்டிகொடுக்ககூடாது என டிடிவி தற்போது தடை போட்டுள்ளார்’ என்று கூறினார்.