ஆளுநர் ஆய்வு செய்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று முன் தினம் தமிழக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவை சென்றார். அங்கு மாவட்ட கலெக்டர், மாநகராட்சி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆளுநரின் ஆய்வால் எந்த பிரச்னையும் இல்லை என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூம் அதில் தவறு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர் ஏற்கனவே மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் என்பதால், அந்த ஆர்வத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதாக விளக்கமளித்தார். ஆளுநரின் ஆய்வு, மத்திய அரசின் நிதியைப் பெற உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.