ஒகி புயல் பாதிப்பால் காணாமல் போன கடலூர் மாவட்ட மீனவர்களின் குடும்பங்களை அமைச்சர் எம்.சி.சம்பத் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி மீன்பிடித்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 24 பேரின் நிலை என்ன என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம் சென்ற அமைச்சர் சம்பத், காணாமல் போன மீனவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மீளாத் துயரத்தில் தவித்துவரும் குடும்பத்தினர், மீனவர்களை விரைந்து கண்டுபிடித்து தருமாறு அமைச்சரிடம் முறையிட்டனர். "கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 13 நாட்களாகிறது. எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு
கஷ்டப்படுகிறோம். குழந்தைகளும் அப்பாவை தேடுகிறார்கள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை" என கண்ணீர்மல்க உறவினர்கள் தெரிவித்தனர். அப்போது காணாமல் போன மீனவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என அமைச்சர் சம்பத் உறுதி கூறினார்.