டிரெண்டிங்

மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டேனா ? - ஓ.எஸ்.மணியன் விளக்கம்

மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டேனா ? - ஓ.எஸ்.மணியன் விளக்கம்

rajakannan

கார் ஓட்டுநர் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வீட்டில் ஓட்டுநராகப் பணிப்புரிந்து வருபவர் சவுந்திரராஜன்(33). சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வந்தார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டுக்குப் பணிக்குச் சென்ற சவுந்திர ராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியில் துடித்த சவுந்திரராஜனை அமைச்சர் வீட்டில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். வலி தாங்க முடியாமல் பாதி வழியிலேயே வண்டியிலிருந்து கீழே விழுந்த சவுந்திரராஜன், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, உரிய நேரத்தில் அமைச்சர் முதலுதவி அளிக்காததால் சவுந்திரராஜன் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டது. இருசக்கர வாகனத்தில் அல்லாமல் காரிலோ, ஆட்டோவிலோ அனுப்பி வைத்திருந்தால் உயிரிழப்பை தடுத்து இருக்கலாம் என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதேபோல், சவுந்திரராஜன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், தனது கார் ஓட்டுநர் உயிரிழந்தது குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறிய உடனேயே ரூ.4,000 கொடுத்து மருத்துவமனைக்கு போகுமாறு கூறினேன். நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் கார் ஓட்டுநர் காவலருடன் மருத்துவமனைக்கு சென்றார். பெரிய அளவில் வலி இருப்பதாக தன்னிடம் எதுவும் கூறவில்லை. கார் ஓட்டுநர் சவுந்தர்ராஜனை நானோ, பாதுகாவலரோ தாக்கவில்லை; தாக்கியதாக கூறுவது தவறு. நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் கார் ஓட்டுநர் காவலருடன் மருத்துவமனைக்கு செல்லும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததே காயத்திற்கு காரணம். தன்னிடம் சிசிடிவி பதிவுகள் உள்ளது, அதனை சோதனை செய்தால் உண்மை தெரியவரும்” என்றார். 

முன்னதாக, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இடையிலேயே எழுந்து சென்றார். ஆனால் செய்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால் மீண்டும் விளக்கம் அளித்தார். அப்போது, செய்தியாளர்களுக்கும், அமைச்சருக்கும் இடையே லேசான வாக்குவாதம் நிலவியது.