தமிழகத்தில், உலகத்தரம் வாய்ந்த 6 அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கீழடியில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பாஸ்கரன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
நான்கு கட்டங்களாக ஆய்வுப் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், மண்பாண்டப் பொருட்கள், சுடுமண் காதணி என மொத்தம் 17ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் இதுவரை கிடைத்துள்ளன.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் க.பாண்டியராஜன், மத்திய தொல்லியல் துறை வசமிருந்த பொருட்கள் தமிழகத்திற்கு வந்துவிட்டதாகவும், கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் 4 மாதங்களில் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.