கன்னியாகுமரியில் அண்ணா சிலைக்கு காவிக்கொடி கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கன்னியாகுமரியில் அண்ணா சிலைக்கு காவி கொடி கட்டிய சமூக விரோதிகள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார். அவர்கள் மீது தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். சுற்றுச்சூழல் சட்டவரைவு குறித்த பதிலளித்த அவர், விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு செயல்படுத்தாது என கூறினார்.
அத்துடன் நியாயவிலைக் கடைகளில் விலையில்லாமல் கூடுதலாக நபர் ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் ஐந்து கிலோ அரிசி நவம்பர் மாதம் வரை தொடர்ந்து வழங்கப்படும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை அக்டோபர் 1ஆம் தேதிக்கு முன்பே நடைமுறைப் படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.