உருகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உணவுத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது, விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதாரணி பிளாஸ்டிக் அரிசி குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்குப் பதில் அளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உருகும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்கில் அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை. இந்தியாவில் எந்தபகுதியிலும் பிளாஸ்டிக் அரிசி பறிமுதல் செய்யப்படவில்லை என்று கூறினார். அதேபோல, அரசு சார்பில் விநியோகிக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் தவறுகள் இருப்பதாகக் கூறிய விஜயதாரணியின் மற்றொரு புகாருக்கு பதிலளித்த அமைச்சர், ஆதார் விவரங்களை ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பயன்படுத்துவதால் பிழைகள் ஏற்படுவதாகக் கூறினார். தமிழகத்தில் இதுவரை 2 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பிழை இல்லாமல் கிடைக்க 3 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்தார். ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் தவறுகளைத் திருத்த வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.