டிரெண்டிங்

“தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலையில்லை” - அமைச்சர் ஜெயக்குமார்

“தேமுதிக கூட்டணிக்கு வராவிட்டால் கவலையில்லை” - அமைச்சர் ஜெயக்குமார்

webteam

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி எனவும் வரவில்லை என்றால் கவலையில்லை எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் அரசியல் நிலவரம் சூடிபிடித்துள்ளது. தமிழகத்தில் கூட்டணி முடிவுகள் பரபரப்புடன் வெளியாகிக்கொண்டிருக்கிறது. 

அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் விருப்ப மனுக்களை விநியோகம் செய்து, அதனை திரும்பவும் பெற்றுவிட்டன. தமி‌‌‌‌ழ‌கத்தின்‌ மு‌க்கிய கட்சியா‌‌ன தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை வெளியிடா‌மல் உள்ளது.‌ அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து அதிமுகவுடன் தேமுதிக இணையும் என நம்புவதாக தமிழக அமைச்சர்கள் தகவல் தெரிவித்து வந்தனர். 

இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஆனால் அப்போது அரசியல் பேசப்படவில்லை என அவர் கூறினாலும் அனைத்து விஷயங்களும் பேசப்பட்டது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். மேலும் தேமுதிகவின் பலம் என்ன என்று எங்களுக்கு தெரியும் எனவும் தங்களுக்கான தகுந்த இடங்கள் கிடைக்கப்பெறும் எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்பமனுக்களும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தேமுதிக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி. வரவில்லை என்றால் கவலை இல்லை. அதிமுகவில் கூட்டணிக்கதவு திறந்தே இருக்கிறது. அந்த வகையில் தான் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஸ்டாலின் விரக்தியில் இருக்கிறார். அது ஒரு தலைவருக்கு அழகல்ல” எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.