டிரெண்டிங்

’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு

’பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம்’.. விளம்பரத்திற்கு அதிமுக கடும் எதிர்ப்பு

JustinDurai

பாஜக தனது விளம்பரத்தில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தாலும் அவ்வப்போது எழும் கருத்துக்கள் புதிது புதிதாக புகைச்சலை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்த முழக்கத்தை பாஜக பயன்படுத்துவது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த மாதம் 6-ம் தேதி பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை தொடங்கும் நிலையில் அதற்கான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 'பொன்மனச் செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமோடா' என்ற வரிகள் ஒலிக்க, பாஜக கொடியுடன் எம்.ஜி.ஆர். புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன், ‘’அனைத்து மக்களும் எம்.ஜி,ஆரை போற்றுவார்கள். ஆனால் பிற கட்சிகள் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் எம்.ஜி.ஆரை போன்று நல்லது செய்து மக்களிடம் பிரதமர் மோடி ஆதரவு பெற்று வருகிறது என்பதைத்தான் அவை உணர்த்துவதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவிக்கிறார்.

ஆட்சியில் நீடிப்பதற்காக பாஜகவிடம் பவ்வியம் காட்டும் அதிமுக தற்போது எம்.ஜி,.ஆரையும் விட்டுக்கொடுத்து விட்டதா அல்லது எம்.ஜி.ஆரையும் பாஜக தட்டிப்பறித்து விட்டதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை பாஜக பயன்படுத்துவது அதிமுக கூட்டணியில் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.