தமிழகத்தில் வேஷம் போட்டு நடிப்பவர்களை மக்கள் நம்ப வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற எம்.ஜி,ஆர். நுாற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். விழாவின் போது எம்.ஜி.ஆர்., படத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிச்சாமி அரசின் திட்டப்பணிகளையும் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், “ஒரு இயக்கத்தின் தலைவராக எப்படி வரவேண்டும் என்பதை பாடல் மூலம் நீருபித்தவர் எம்.ஜி.ஆர். திரைப்பட பாடல்கள் மூலம் இளைய தலைமுறைக்கு அறிவுரை, நெறிமுறைகளை வழங்கியவர் எம்.ஜி.ஆர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் கல்விப்புரட்சி ஏற்பட்டது. நாட்டில் உயர்கல்வி துறையில் தமிழகம் உயர்ந்துள்ளது. விவசாயத்துறையில் சிறந்து விளங்குவது அதிமுக அரசு தான். மின்வெட்டே இல்லாத மாநிலம் தமிழகம். பருவ மழை நீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. மக்களை ஏமாற்ற வேஷம் போட்டு நடிப்பவர்களை மக்கள் நம்ப வேண்டாம். திமுக தான் பச்சோந்தி போன்று செயல்படுகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காவிரி, கட்சத்தீவு பிரச்னை உள்ளிட்டவற்றில் அக்கறை செலுத்தாமல் வாரிசுகளுக்காக மத்திய அரசிடம் போராடியது திமுக தலைமைதான் என்று விமர்சித்தார். கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். சுகாதாரத்துறையில் பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளதாக கூறினார். குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையம், தடுப்பணை, பாலம் என திண்டுக்கல் மாவட்டத்திற்கு 39 சிறப்புத் திட்டங்களையும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். பின்னர் நூற்றாண்டு விழா நிறைவின் போது பிரம்மாண்டமான கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. கேக் வெட்டிய முதலமைச்சர் பழனிசாமி, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.