அனுமதியின்றி பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்ட 150 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் அரசின் அனுமதியின்றி உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி சட்டவிரோதமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டபோது முதலமைச்சர் பழனிசாமியின் கைகளால் இந்த சிலைகள் திறக்கப்பட இருந்தது. அப்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி தராததால் சிலை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டு சென்ற வாரம் வரை மூடியே வைக்கபட்டிருந்தது.
கடந்த 22-ஆம் தேதி சிலையை திறக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்ட அதிமுகவினர், அதிகாலை போலீசாரின் எதிர்ப்பையும் மீறி சிலையை திறந்து மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள். ஒரு வாரம் பொறுமையை கடைபிடித்த காவல்துறையினர் நேற்று நள்ளிரவு சிலையை அகற்ற முற்பட்டனர், அப்போது அங்கு குவிந்த அதிமுகவினர் சிலைகளை அகற்ற விடாமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தர்ணாவில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்த காவல்துறையினர் இரவு 3 மணி அளவில் இருந்து சிலையை அகற்றும் பணியினை தொடங்கி காலை 6 மணிக்கு இரண்டு சிலைகளையும் அகற்றி திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக கிட்டங்கியில் பத்திரமாக வைத்தனர். இச்சம்பவங்களால் திருவண்ணாமலையில் பரபரப்பு நிலவி வருகிறது.