டிரெண்டிங்

”அவங்க சந்தோஷமும் நிம்மதியும்தான் எங்களுக்கு தேவை” - ஊழியர்களை அசர வைத்த மீஷோ நிறுவனம்!

”அவங்க சந்தோஷமும் நிம்மதியும்தான் எங்களுக்கு தேவை” - ஊழியர்களை அசர வைத்த மீஷோ நிறுவனம்!

JananiGovindhan

ஐ.டி. உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மனநல ஆரோக்கியத்தை பெரும்பாலும் நிர்வாகங்கள் கருத்தில்கொள்வதில்லை. ஓவர் டைம் வேலை பார்த்தாலும் அவர்களது மனநலன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நிறுவனங்கள் பரிசீலிப்பதே இல்லையென்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த ஷேவிங் கம்பெனியின் நிறுவனரும் சி.இ.ஓவான சாந்தனு தேஷ்பாண்டே “இளம் ஊழியர்கள் குறைந்தது ஒரு நாளுக்கு 18 மணிநேரமாவது வேலை பார்க்க வேண்டும்” என தனது லிங்க்டின் பக்கத்தில் பகிர்ந்தது பெரும் சலசலைப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் அதே இந்தியாவைச் சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொறுட்டு, ஆண்டுக்கு 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்திருப்பது பிற நிறுவன ஊழியர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. 

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு இணையாக பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட மீஷோ நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சிறிது காலத்திலேயே மக்களின் ஏகோபித்த மதிப்பை மீஷோ நிறுவனம் பெற்றிருக்கிறது.

வாடிக்கையாளர்களை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க வேண்டும் என எண்ணி மீஷோ நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, “பண்டிகை கால விற்பனை வழக்கத்திற்கு மாறாகச் சற்று அதிகமாகவே இருக்கும்.

ஆகையால் இந்த ஃபெஸ்டிவ் சீசன் சேல் முடிந்த பிறகு ஊழியர்களுக்கு கட்டாயம் ஓய்வு தேவையாக இருப்பதால் வருகிற அக்டோபர் 22 முதல் நவம்பர் 1ம் தேதி வரை 11 நாட்களுக்கு மீஷோ ஊழியர்கள் விடுமுறையில் செல்ல அனுமதிக்கிறோம்” என மீஷோவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சஞ்சீவ் பர்ன்வால் ட்விட்டரில் அறிவித்துள்ளார். இந்த திட்டம் இரண்டாவது ஆண்டாக நடைமுறைப்படுத்துவதாகவும், இதற்கு Reset and recharge என்று அழைப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் பலரும், “இந்தியாவுக்கு இதுப்போன்ற தொழில்முனைவோர்களே தேவை”, “முக்கியமான முன்னெடுப்பு.” , “மீஷோ போன்ற நிறுவனங்கள் ஊழியர்கள் மனநலத்தில் அக்கறை கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் பதிவிட்டு வருகிறார்கள்.