தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறனின் புத்தகத்தை அழிக்க உத்தரவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஈழத்திற்கு ஆதரவாக "தமிழ் ஈழம் சிவக்கிறது" என்ற புத்தகத்தை 1994-ம் ஆண்டு பழ.நெடுமாறன் வெளியிட்டார். இதனால் அவர் கடந்த 2002-ம் ஆண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் வெளியிட்ட புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 2006-ம் ஆண்டு பழ.நெடுமாறன் விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தன்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை திரும்பத் தரக் கோரி பழ.நெடுமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன், பழ. நெடுமாறனின் மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு, இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக கூறி புத்தகங்களை திரும்ப வழங்க மறுத்ததோடு, அந்தப் புத்தகங்களை சட்ட நடைமுறைகளை பின்பற்றி அழிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய வைகோ, பழ.நெடுமாறன் எழுதிய “தமிழ் ஈழம் சிவக்கிறது” புத்தகத்தை அழிக்க சொன்னது அதிர்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “சுதந்திர தமிழ் ஈழம் என்ற கருத்து தமிநாட்டில் பரவக் கூடாது. அது தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கருத்து என்ற காரணத்தினால், இந்த நூலின் ஆசிரியர் இந்தக் கருத்தினை தொடர்ந்து சொல்லி வருபவர் என்பதால் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுவை தள்ளுபடி செய்ததோடு, புத்தகங்களையும் அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் பழ.நெடுமாறன் மேல்முறையீட்டுக்கு செல்வார் என நான் நினைக்கிறேன். இந்தத் தீர்ப்பினால், தமிழ் ஈழம் தொடர்பான உணர்வையோ, தமிழ் ஈழ விடுதலை உணர்வையோ ஒருபோதும் அழித்துவிட முடியாது. முத்துக்குமார் உள்ளிட்ட 19 பேர் இந்த லட்சியத்துக்காக தீக்குளித்து தியாகம் செய்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் சீனு.ராமசாமி, “அரசு கைப்பற்றிய புத்தங்களை திருப்பி தரலாம் அல்லது தரமறுக்கலாம் என்பதை தாண்டி அவற்றை அழிக்கச் சொல்லி வந்த தீர்ப்பால் கருத்துச் சுதந்திரத்தின் கண்கள் கலங்குகிறது” என்று கூறியுள்ளார்.