வன்முறை சம்பங்களால் 4 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், வடஇந்தியர்கள் ஒன்றும் வெளிநாட்டவர்கள் அல்ல என்று குஜராத் அரசுக்கு மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அகமதாபாத், பதான் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டங்களில் போது வெளிமாநில தொழிலாளர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்தக் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. வன்முறை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வன்முறை சம்பங்கள் காரணமாக குஜராத்தில் தங்கி வேலை செய்யும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், பீகார் உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இரவோடு இரவாக கூட்டம் கூட்டமாக அம்மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேறியுள்ளதாகவும் கடந்த மூன்று நாட்களாக பல தொழிலாளர்கள் பணிக்கு வராததால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பீகார், உத்தரபிரதேசம் மாநில முதலமைச்சர்களான நிதிஷ்குமார், யோகி ஆதித்யநாத் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை தொடர்பு கொண்டு பேசினர். வன்முறையால் தங்கள் மாநில தொழிலாளர்கள் திரும்பியுள்ளது குறித்து கவலை தெரிவித்தனர். பின்னர், வன்முறை சம்பவங்கள் முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக முதலவர் விஜய் ரூபாய் தெரிவித்தார். வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உறுதி அளித்தார்.
இந்நிலையில், வடஇந்தியர்கள் ஒன்றும் வெளிநாட்டவர்கள் அல்ல என்று குஜராத் அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், “இந்த விவகாரத்தில் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை. வட இந்தியர்கள் வெளிநாட்டவர்கள் இல்லை. அவர்கள் நம்முடைய நாட்டின் குடிமக்கள்தான். வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏழைகளுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது.
இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க முடியவில்லையெனில், அரசே அதற்கு உடந்தையாக இருப்பதாக ஆகிவிடும். தனது சொந்த மாநிலத்தில் உத்தரபிரதேசம், பீகார் மக்களை பாதுகாக்க முடியவில்லை, பிரதமர் மோடிக்கு உத்தரபிரதேசத்தில் இடமில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுத்து, கும்பல் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குஜராத் அரசினை கேட்டுக் கொள்கிறேன். பிரதமர் மோடிக்கு வாக்களித்த வாரணாசி மக்கள் மீது குஜராத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. தங்கள் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் பாதுகாப்பாக இருப்பதை குஜராத் அரசு முதலில் உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
முன்னதாக, குஜராத் பாஜக அரசு மீது ராகுல் காந்தியும், ராகுல் காந்தி மீது முதல்வர் விஜய் ரூபானியும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.