டிரெண்டிங்

"சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ளாதீர்"- வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம்

"சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தயவுசெய்து தொடர்புகொள்ளாதீர்"- வைரலாகும் மேட்ரிமோனியல் விளம்பரம்

Abinaya

சமீபத்தில் திருமண விளம்பரம் ஒன்று டிவிட்டரில் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. பெரும்பாலும் திருமண விளம்பரங்களில், தங்களது தேவைகளைக் குறித்த விபரங்கள் இடம் பெற்று இருக்கும். ஒருசில திருமண விளம்பரங்களில், தங்களுக்கு என்ன தேவையில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்கள். அந்தவகையில், சமீபத்தில் வெளியான ஒரு திருமண விளம்பரத்தில், “மென்பொருள் பொறியாளர்கள் தயவு செய்து அழைக்க வேண்டாம்’’ என்று குறிப்பிட்டு உள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.

அந்த விளம்பரத்தின்படி, வசதியான வணிகப் பின்னணியில் எம்பிஏ படித்த அழகான பெண் மணமகனைத் தேடுகிறார். மற்ற எல்லா மேட்ரிமோனியல் விளம்பரங்களைப் போலவே தனது தேவைகளைக் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். IAS/IPS, வணிகம், தொழில்துறை , மருத்துவர் என்ற பின்னணியிலிருந்து ஒரே சமூகத்தைச் சேர்ந்த மணமகனைத் தேடுவதாக குறிப்பிட்டிருக்கிறார் அவர். கூடுதலாக மற்ற திருமண விளம்பரங்கள் போல், மணமகனுக்கு இருக்க வேண்டிய உயரம், நிறத்தை எல்லாம் குறிப்பிடவில்லை. ஆனால் கடைசி வரியில் “தயவு செய்து மென்பொருள் பொறியாளர்கள் போன் செய்ய வேண்டாம்” என குறிப்பட்டு உள்ளார்.

இந்த விளம்பரம் குறித்து ஐ.டி பணியாளர்கள் சிலர் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர். அதிலும் ஒருசிலர், “ஐ.டி.-யில் பணியாளர்கள் `உண்மையில் அதிக சம்பளம் வாங்குபவர்களாக இருப்பார்கள் - அவ்வப்போது பார்டி செய்வார்கள் -வேலை சுமை குறைவாக இருக்கும் - ஐ.டியில் வேலை கிடைத்தால் வாழ்க்கை செட்டில்’ போன்று மக்களிடம் பரவி கிடக்கும் பொதுவான எண்ணவோட்டத்தை அசைத்துள்ளது இந்த விளம்பரம்” என்றுள்ளனர்.

அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் இதுகுறித்த தனது தகவலில், “தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக இல்லை’’ என்று கூறியுள்ளார். இது ஐடி பணியாளர்கள், அதை நம்பி இருப்போரிடையே அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.