திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தில் மகளிர் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். முடி திருத்தும் தொழில் செய்துவருகிறார். இவரது மனைவி லட்சுமி வெங்கடாசலம். இவர்களுக்கு 12 வயது நிரம்பிய மகள் இருந்தார்.
இந்நிலையில் சென்ற ஆண்டு ஏப்ரல் 16 அன்று கணவன் மனைவி இரண்டு பேரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் (19) பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தார். இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபானந்தனை கைது செய்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இக்கொலை தொடர்பாக 35 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை கேட்டு இறந்து சிறுமியின் தாயார் லட்சுமி நீதிமன்றத்தில் தரையில் உருண்டு புரண்டு அழுதனர்
மேலும் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் நீதிமன்ற வளாகம் முன்பு மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் முறையாக விசாரணை செய்யாமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறி மாதர் சங்கத்தினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. .