மக்களவைத் தேர்தல் வாக்குறுதியாக, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள நியாய் திட்டத்தை செயல்படுத்தும்போது, நடுத்தர வர்க்கத்தினர் மீது வரிகள் எதுவும் விதிக்கப்படாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வாக்குறுதியில் ஏழை, எளிய மக்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நியாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும், தங்கள் பரப்புரையில் குறிப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் 'நியாய்' திட்டம் குறித்து அறிக்கை ஒன்றை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ளார். அதில், 'நியாய்' திட்டத்தை செயல்படுத்தும்போது நடுத்தர வர்க்கத்தினர் மீது புதிய வரிகள் எதுவும் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் கூறியுள்ளார். திட்டத்தை செயல்படுத்தும்போது, மொத்த உற்பத்தியில் 1.2 முதல் 1.5 சதவிகிதம் வரை மட்டுமே செலவாகும் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும், வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகே 'நியாய்' திட்டத்துக்கு முழு வடிவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைக்குக் கொண்டு வர முடியும் என்றும் அறிக்கையில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.