டிரெண்டிங்

கொரோனாவால் தனித்தீவாக மாறிய அழகிய மாஞ்சோலை!

JustinDurai

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரின் மடியில் குடிகொண்டிருக்கும் ஓர் அழகான மலைப்பிரதேசம் மாஞ்சோலை. இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க லோகம் மட்டுமல்ல, பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழவைக்கும் தேவலோகமும்கூட.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் பின்னணி, போராட்டங்களும் துயரங்களும் நிறைந்தது என்பதிற்கு  ‘தாமிரபரணி’ நதியே சாட்சி,. உரிமைக்காக உயிர்களையும் பறிகொடுத்தவர்கள். பிழைப்பிற்காக சுக துக்கங்களை மறந்தவர்கள்.  

அமேசான் காடுகளையே விட்டுவைக்காத கொரோனா மாஞ்சோலையை மட்டும் விட்டுவிடுமா என்ன? காடு மலை கடந்து மாஞ்சோலையையும் சற்றே அசைத்துப் பார்த்திருக்கிறது கொரோனா.

மாஞ்சோலையில் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் என மொத்தம் 2,500 பேர் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மாஞ்சோலையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து சொந்த ஊரான திருநெல்வேலிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாஞ்சோலையில் வசிக்கும் தொழிலாளர்கள் அனைவரும் ஒருவாரம் வேலைக்குச் செல்ல தடைவிதித்து, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எஸ்டேட் நிர்வாகம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்தில் இருந்து தினமும் இரண்டு அரசு மினி பேருந்துகள் இயங்கிவந்தன. கொரோனா பாதிப்பினால் அரசு பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சமவெளியிலிருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவு போன்று இருக்கிறது மாஞ்சோலை. காய்கறி, மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே மேலே ஏறும் வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுவதாக கூறும் தொழிலாளர்கள், அனைவருக்கும் தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

சமவெளி பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தொழிலாளர்கள் தேவையின்றி எஸ்டேட்டை விட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டாம் என எஸ்டேட் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் நான்கு மாதங்களாக சுக துக்கங்களுக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமலும் ஏற்கெனவே சென்றவர்கள் திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் கூறுகின்றனர். ‌ 

மேலும் எஸ்டேட் நிர்வாகம் சார்பில் தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப மாதங்களாக சிகிச்சைக்கும் மருந்துக்கும் கட்டணம் கேட்பதாக தொழிலாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர். ஒருபுறம் பஸ் போக்குவரத்து நிறுத்தம், மறுபுறம் தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம் எனக்கூறி விட்டு சுகாதார நெருக்கடி நிலவும் இந்நேரத்தில் தொழிலாளர்களிடம் இருந்து சிகிச்சைக்கு பணம் கேட்பாதல் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.