பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் போது உட்காருவதற்கு இடம் பிடிப்பதற்கெல்லாம் ஒரு அசாத்திய திறனே தேவைப்படும். இருப்பினும் அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலியாகும் என்பது போல முண்டியடித்துக் கொண்டு யார் இடத்தை பிடிப்பது என்ற போட்டா போட்டியே நிகழும்.
இப்படியான இடர்பாடுகளை தவிர்க்க சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கென சிங்கிள் சீட்டர் சோஃபாவை சுமந்துச் செல்வதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார். இது சீன மக்களின் கவனத்தை ஈர்த்ததோடு தலைப்புச் செய்தியாகவே மாறியிருக்கிறது.
அதன்படி சீனாவின் ஹாங்சோ என்ற நகரத்தில் உள்ள சப்வே மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிக்கும் இளைஞர் ஒருவருக்கு ரயிலில் உட்கார இடம் கிடைக்காமல் போவதால் சாவகாசமாக அமர்ந்து வருவதற்காக தனக்கென ஒரு குஷன் சோஃபாவை கொண்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அவரின் இந்த செயலுக்கு மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளும் பெரிதாக எந்த கெடுபிடியும் விதிக்காமல் விட்டிருக்கிறார்கள். அந்த சோஃபாவை முதுகில் சுமக்கும் பையை போல மாட்டிக் கொண்டு வரும் அந்த இளைஞரை நெட்டிசன்கள் மற்றும் உள்ளூர் மக்கள் வாட்டர்மெலான் என்றே அழைப்பார்களாம்.
இது குறித்து ஹாங்சோ ரயில் நிலையத்துக்கே சென்று ஊடகங்கள் பலவும் நேர்காணலும் நடத்தியிருக்கின்றனவாம். அதில் பேசியிருக்கும் அந்த வாட்டர்மெலான் இளைஞர், தான் ஒரு சாதாரண ஊழியன் என அறிமுகம் செய்துகொண்டவர் சோஃபாவுடன் பயணிக்கும் வீடியோவும் தானும் தனது நண்பர்களுமே எடுத்து பகிர்ந்ததாக கூறியிருக்கிறார்.
“ஏனெனில் எங்களுக்கு எப்போதுமே இந்த சப்வே மெட்ரோ ரயிலில் உட்காருவதற்கு இடம் கிடைப்பதேயில்லை. அதனால்தான் இந்த சோஃபா ஐடியாவை கையில் எடுத்தோம். எங்களின் வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் எப்படி சப்வே நிலையத்துக்குள் சோஃபாவை கொண்டு வருவதென யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்றிருக்கிறார் வாட்டர்மெலான்.
தொடர்ந்து பேசியுள்ள வாட்டர்மெலானின் நண்பர் ஸிகுவா, “சப்வே நிலையத்துக்குள் சோஃபா கொண்டு வர ரயில் நிலைய ஊழியரிடம் கேட்டு அனுமதி பெற்றதோடு, ஸ்கேனிங்னின் போது சோஃபாக்குள் எதுவும் இல்லை என்பதை உறுதியும் செய்துகொண்டனர்.” என்றார்.
இதுகுறித்து பேசியிருக்கும் ஹாங்சோ நகராட்சி நிர்வாகத்தினர், “30 கிலோ எடை வரை உள்ள பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.” எனக் கூறியுள்ளனர். இதுபோல சோஃபா கொண்டு செல்வதால் மக்களிடையே சலசலப்பு ஏற்படாமல் இருக்க வாட்டர்மெலானும் அவரது சகாக்களும் கூட்டம் இல்லாத நேரத்தில் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.