டிரெண்டிங்

ஃபேஸ்புக் லைவில் அறிவித்துவிட்டு கேரளாவில் லாட்டரி கடைக்கு தீ வைத்த நபர்.. ஏன் தெரியுமா?

ஃபேஸ்புக் லைவில் அறிவித்துவிட்டு கேரளாவில் லாட்டரி கடைக்கு தீ வைத்த நபர்.. ஏன் தெரியுமா?

JananiGovindhan

கேராளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஃபேஸ்புக் நேரலையில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டு நேரடியாக சென்று லாட்டரி ஏஜென்சி கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நடந்திருக்கிறது. கொச்சி அருகே இருக்கக் கூடிய திருப்பூணித்துறாவின் வடக்கே கோட்டா பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர்தான் இந்த செயலை செய்திருக்கிறார்.

கடந்த சனிக்கிழமை (மார்ச் 4) மாலை 5.40 மணியளவில் இந்த சம்பவத்தை ராஜேஷ் நிகழ்த்தியதாக கேரள செய்திகள் மூலம் அறிய முடிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ராஜேஷை கைது செய்திருக்கிறார்கள்.

தீ வைக்கப்பட்ட லாட்டரி கடையில் இருந்து ஏராளமான லாட்டரி டிக்கெட்டுகள் தீயில் கருகியதோடு, ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரொக்கமும் நாசமாகியிருக்கிறதாம்.

லாட்டரி ஏஜென்சியில் இரண்டுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்ததால் தீ வைக்கப்பட்ட போது பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதவாறு தவிர்க்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ராஜேஷ் எதற்காக லாட்டரி கடையில் தீ வைத்தார் என்ற காரணம் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக ஃபேஸ்புக் நேரலையில் பேசியிருந்த ராஜேஷ், “எங்களுக்கு உண்மையான கம்யூனிசமே தேவை. EMS நம்பூதிரிபட் ஆட்சியின் போது இருந்த கம்யூனிசமே தேவை. மக்களுக்காக சேவை புரியக் கூடிய தோழர்களே தேவை” என பேசியிருந்ததாக போலீசார் கூறியிருக்கிறார்கள்.

இதனிடையே லாட்டரி கடைக்கு வெறித்தனமாக பெட்ரோல் ஊற்றி தீ வைக்கும் ராஜேஷின் செயல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.