டிரெண்டிங்

”கைப்பட எழுதுவதே ஒரு அலாதி இன்பம்தான்” - இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்த காதல் கடிதம்!

”கைப்பட எழுதுவதே ஒரு அலாதி இன்பம்தான்” - இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்த காதல் கடிதம்!

JananiGovindhan

உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்களும் சாக்லேட் டே, ஹக் டே, ப்ரோப்போசல் டே, கிஸ் டே-க்கு ஏற்றவாறு மீம் பதிவுகளை பறக்கச் செய்து வருகிறார்கள்.

இதுபோக தத்தம் காதலர்களை கவர காதல் வசனம் எழுத கூகுள் தேடுபொறிக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சாட் GPT-ல் பலரும் குழுமியிருக்கிறார்கள் என்றும் குறிப்பாக இந்தியாவில் இருந்துதான் 62 சதவிகிதம் பேர் சாட் GPT-ல் காதல் வசனங்களை தேடியிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

யாரோ ஒருவர் எழுதிய வரிகளை கொண்டு போய் பிடித்தமானவர்களிடம் கொடுப்பதை காட்டிலும், சரியோ தப்போ நம்முடைய உணர்வை நாமே கைப்பட எழுதி அதனை கொடுப்பதில் இருப்பதுதான் அலாதியான இன்பமாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகவே பெரும்பாலான இளைஞர்கள் க்ரீட்டிங் கார்டுகளையே காதல் புறாவாக நம்பி இருந்தார்கள்.

ஆனால் இதே நூற்றாண்டின் மத்தியில் இருக்கும் நபர் ஒருவர் தன்னுடைய காதலிக்காக கைப்பட எழுதிய கடிதம்தான் தற்போது இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதன்படி ஓம்கார் கந்தேகர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று என்னுடைய அறையை சுத்தம் செய்யும் போது இந்த அழகான காதல் கடிதம் கிடைத்தது. இந்த அறையை எனக்கு முன்னால் பயன்படுத்தியவரின் கடிதமாக இது இருக்கும் என நினைக்கிறேன்” என கேப்ஷனிட்டு அந்த முத்தான காதல் கடிதத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

அந்த கடிதத்தில், “இந்த நேரம் உன்னோடு இருப்பதே எனக்கு ஆசீர்வதிக்கப்பட்டதாக இருக்கிறது. குறிப்பாக சோகமோ சந்தோஷமோ இல்லாவிட்டாலும் நமக்கு கிடைத்திருக்கும் இந்த பரிசுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஒன்றாக சேர்ந்து பயணிக்கப் போகிறோம் என்பதை உணரும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது.” என காதல் பொங்க எழுதப்பட்டிருக்கிறது.

இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் பூரித்துப்போனதோடு, “இது விலைமதிப்பற்ற ஒன்று” , “கையால் எழுதப்படும் கடிதங்கள் எப்போதும் இதயத்தை கரையச் செய்யும் சக்தி இருப்பது உண்மையே” , “முழு நீள படத்துக்கான சிறு கதையை போல இருக்கிறது” என்றெல்லாம் சிலாகித்து பதிவிட்டிருக்கிறார்கள்.

மேலும், இந்த கடிதத்தை கண்ட சில பயனர்கள், “அழகியல் பொருந்திய இந்த கடிதத்தை ஒருவேளை அந்த நபர் சேர்க்க வேண்டியவரிடத்தில் சேர்க்காமல் இருந்திருப்பாரோ என்னவோ” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதுபோல நீங்கள் உங்களுக்கு மனதுக்கு பிடித்தவருக்காக கைப்பட எழுதிய கடிதத்தை கொடுத்தோ அல்லது அதனை கொடுக்காமல் தவறவிட்ட நிகழ்வு ஏதும் இருந்தால் அந்த அனுபவங்களை பதிவிடலாம்.