டிரெண்டிங்

ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்த டிரைவர்.. 25 KM-க்கு பிசகில்லாமல் வந்த கார்.. எப்படி நடந்தது?

ஸ்டியரிங்கில் மயங்கி விழுந்த டிரைவர்.. 25 KM-க்கு பிசகில்லாமல் வந்த கார்.. எப்படி நடந்தது?

JananiGovindhan

நெடுந்தூரம் செல்லும் கார் பயணங்களின்போது தூக்கம் கண்ணை கட்டுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாகனத்தை ஓட்டுவதுதான் சிரமமான விஷயமாக இருக்கும்.

அதுவும் காரில் இருக்கும் எல்லாரும் தூங்கும்போது தூக்கத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு ஓட்டுவது என்பது Pro லெவல் என்றே பெரும்பாலும் கூறுவார்கள்.

இப்படி இருக்கையில், காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே மயக்க நிலையில் ஸ்டியரிங் மீது விழுந்து கிடந்த ஒருவரது கார் எந்த தடையும் இல்லாமல் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான். இந்த சம்பவம் பெல்ஜியமில் நடந்திருக்கிறது.

நேற்று முன் தினம் அதாவது ஆகஸ்ட் 14-ம் தேதியன்று பெல்ஜியமில் உள்ள லியூவன் என்ற பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த வாகன ஓட்டி ஒருவர், அவ்வழியே வந்த காரில் விழுந்தபடி கிடந்த நபர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவசர போலீசுக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

இதனையறிந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த போலீசாரும் தீயணைப்புத் துறையும் இயங்கிக் கொண்டிருந்த ரெனால்ட் க்ளியோ என்ற அந்தக் காரை ஒருவழியாக நிறுத்தி சோதனை இட்டிருக்கிறார்கள்.

அதில் ஓட்டுநர் இருக்கையில் மயங்கிக் கிடந்த 41 வயதான நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். அங்கு அவருக்கு மது அல்லது போதை பொருட்கள் ஏதும் எடுத்துக்கொண்டாரா என பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான முடிவுகள் ஏதும் வரவில்லை.

இதனிடையே கார் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். அதன்படி, மயக்கமடைந்த நிலையில்தான் அந்த நபரின் கார் கிட்டத்தட்ட 25 கிலோ மீட்டருக்கு பயணித்திருக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ஹெலன் பகுதியில் இருந்த வந்தபோது இடையில் மயங்கிய அந்த ஓட்டுநர் காரின் முன் விழுந்திருக்கிறார். அப்போது அந்த ரெனால்ட் காரில் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் அசிஸ்ட் உள்ளதால் எந்த தடங்களும் இன்றி கார் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்திருக்கிறது என தெரிய வந்திருக்கிறது.

காரை கண்டு தகவல் அளித்தவரிடம் விசாரித்ததில், “ரெனால்ட் க்ளியோ கார் சீரான வேகத்தில் பயணித்து வந்து, இடமிருந்து வலமாக நகர்ந்து சென்றதை பார்த்தேன்” என அந்த நபர் கூறியிருக்கிறார்.

காரை ஓட்டி வந்தவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்பது அவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டதன் மூலம் அறிய முடிகிறது. மேலும் காரில் உள்ள தொழில்நுட்பம் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் நேராத வகையில் அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.