ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின், சோனியாகாந்தி, உத்தவ் தாக்கரே, சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், நவீன் பட்நாயக், தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் “ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான பாஜகவின் தாக்குதலை தடுக்க ஒன்றிணைய வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு ஆளுநர் மூலம் மத்திய அரசு பிரச்னை கொடுக்கிறது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜக உறுப்பினர்களை போல் செயல்படுகின்றனர்.
சிபிஐ, அமலாக்கத்துறையை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அமலாக்கத்துறை மூலம் மிரட்ட பாஜக நினைக்கிறது. ஒற்றை கட்சி ஆட்சிமுறையை இந்தியா முழுவதும் கொண்டுவர வேண்டும் என பாஜக நினைக்கிறது. பாஜகவுக்கு எதிரான இந்த போரில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். 5 மாநில தேர்தல்கள் முடிந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முடிவெடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.