டிரெண்டிங்

“ஒரே நாடு.. ஒரே தேர்தல்” - கூட்டத்தில் பங்கேற்க மம்தா மறுப்பு

“ஒரே நாடு.. ஒரே தேர்தல்” - கூட்டத்தில் பங்கேற்க மம்தா மறுப்பு

rajakannan

ஒரே நாடு.. ஒரே தேர்தல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது பாஜக ஆட்சியின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரின் நடுவே பல்வேறு கூட்டங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதில், முக்கியமானது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை நடத்த நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் ஆலோசனை நடத்த மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாளை இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை அனைத்து கட்சிகளுக்கும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அனுப்பியுள்ளார். ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டசபைக்கு தேர்தலை நடத்த நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், பாஜக கூட்டணியில் இல்லாத தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா கூறுகையில், “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ விவகாரத்திற்கு சரியான மதிப்பு கொடுக்க வேண்டும். மிகவும் குறைவான நேரத்தில் இதுபோன்ற விஷயங்களுக்கு நீதி சேர்க்க முடியாது. அரசியல் நிபுணத்துவம் கொண்ட அறிஞர்கள், தேர்தல் வல்லுநர்கள் மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

அவசர கதியில் இதனை செய்வதைவிடுத்து, தேவையான நேரம் கொடுத்து அவர்களது கருத்துக்களை கேட்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இதுபோன்று அவசரமாக செய்தால், நாங்கள் எங்களது உறுதியான கருத்துக்களை தெரிவிக்க வேண்டியிருக்கும்” என்று தெரிவித்தார்.