டிரெண்டிங்

SEET நுழைவுத்தேர்வு ஏன்? - மக்கள் நீதி மய்யம் விளக்கம்

SEET நுழைவுத்தேர்வு ஏன்? - மக்கள் நீதி மய்யம் விளக்கம்

webteam

தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட seet நுழைவுத்தேர்வு குறித்து மக்கள் நீதி மய்யம் விளக்கம் அளித்துள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு, முழு மதுவிலக்கை கொண்டு வருவதே இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறுவோரின் வாழ்வாதாரம் உயரும்வரை, இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்படும் என்றும், நதி நீர் இணைப்பு, அதி திறன் நீர் வழிச்சாலை, சுத்தமான நீர் ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் MBBS படிப்பிற்கு SEET தேர்வு நடத்தப்படும் என்றும், உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும் மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SEET தேர்வு ஏன் என்பது குறித்து மக்கள் நீதிமய்யம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய மக்கள் நீதி மய்யத்தின் பொன்ராஜ் “மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வை உறுதி செய்திருக்கிறது. ஆனால் அதன் சட்டத்தில் மாநில அரசின் மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் நடத்தலாம் என்ற விதிமுறையே இல்லை. மத்திய அரசு நடத்தும் கல்லூரிகளுக்கு மட்டுமே நீட் அவசியம் என சட்டம் சொல்கிறது. இதுகூட தற்போதைய தமிழக அரசுக்கு தெரியவில்லை. நீட் தேர்வின் சட்டத்தில் எந்த இடத்திலும் சிபிஎஸ்இ பாடதிட்ட முறைப்படிதான் நீட் தேர்வு நடத்தவேண்டும் என்ற விதிமுறையும் இல்லை. மாநில அரசிற்கு என்று சில உரிமைகள் உள்ளன. மத்திய அரசுக்கு என்று சில உரிமைகள் இருக்கின்றன.

பாஜக இருக்கும்வரை நீட்டை ரத்து செய்யாது. அதனால் நாம் சீட்(STATE ENTRANCE ELEGIBILITY TEST) என்ற தேர்வை கொண்டு வருகிறோம். இதில் ஸ்டேட் போர்டு பாடத்திட்டங்கள் மட்டுமே இடம்பெறும். மத்திய அரசிடம் சண்டை போட முடியும். என்ன செய்ய முடியுமோ அதை செய்வதுதான் மக்கள் நீதி மய்யம்” என்றார்.

மேலும், கமல்ஹாசன் பேசுகையில், “ராணுவ கேண்டீன் போல நியாயமான விலையில் மக்கள் கேண்டீன் உருவாக்கப்படும். வாஷிங்மெஷின் கொடுத்து அதன் பில் மக்கள் தலையிலேயே ஏற்றப்படுகிறது. அதிக கடன் சுமை இருக்கும்போது இலவசம் எப்படி கொடுக்க முடியும். இல்லத்தரசிகளின் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். நிறைவேற்றக்கூடிய திட்டங்களைத்தான் வாக்குறுதிகளாக மக்கள் நீதி மய்யம் அறிவிக்கிறது. 234 தொகுதிகளிலும் அப்துல்கலாமின் புரா திட்டமான தற்சார்பு கிராமங்கள் உருவாக்கும் திட்டம் அமல்படுத்தப்படும்” என்றார்.