டிரெண்டிங்

கட்சியிலிருந்து வெளியேறினார் மத்திய அரசை கடுமையாக விமர்சித்த பாஜக எம்பி

webteam

மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வந்த மஹாராஷ்டிர பாஜக எம்பி கட்சியிலிருந்து வெளியேறினார்.

மத்திய அரசையும் பாஜகவையும் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் தற்போதைய சூழலில், மஹாராஷ்டிர மாநிலம் விதார்பாவின் எம்பி நானா படோல் பாஜகவிலிருந்து வெளியேறினார். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் படோல். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். அவர்கள் செவிசாய்க்காததால் மத்திய, மாநில பாஜக அரசுகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தவர். பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து போராடிய போது அவருடன் நானா படோல் பங்கெடுத்துக் கொண்டார்.

நானா படோல், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக நின்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை விட 1.49 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கடந்த மாதம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், நான் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பின்னர், பல கட்சிகள் என்னை அணுகி கட்சியில் சேர வலியுறுத்தினர். ஆனால் அதையெல்லாம் மறுத்துவிட்டு, பாஜகவில் சேர்ந்தேன் என்று கூறினார்.

விவசாயிகள் பிரச்னையில் மஹாராஷ்டிராவின் ஃபட்னாவிஸ் அரசு கரிசனத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். நேற்று வெள்ளிக்கிழமை, விவசாயிகள் பிரச்னையில் பிரதமர் மோடி செவிசாய்க்க மறுக்கிறார் என்ற காரணத்திற்காக பாஜக கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார். சமீபகாலமாக மத்திய பாஜக அரசை, அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களே விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.