டிரெண்டிங்

பொதுமுடக்கத்தை வருமானம் ஈட்டும் காலமாக மாற்றிய மாணவி..!

பொதுமுடக்கத்தை வருமானம் ஈட்டும் காலமாக மாற்றிய மாணவி..!

webteam

மதுரையில் மாணவி ஒருவர் கொரோனா பொதுமுடக்க காலத்தில் கைவினைப் பொருட்களை செய்து அதனை விற்பனை செய்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி பாலமீனாட்சி. இவர் கொரோனா பொதுமுடக்கத்தில் கிடைத்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றி வருமானம் ஈட்டி வருகிறார். இந்தக் கால இளைஞர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்கும் நிலையில், இந்த மாணவியோ யூடியூப்பில் கைவினைப் பொருட்கள் செய்வது எப்படி எனக் கற்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு தேவையான பொருட்களை செய்துள்ளார். அதன் அழகைக் கண்ட அக்கம்பத்தினர் விலைக்கு வாங்கிக்கொள்வதாக கூற, அவர்களுக்கு தேவையானவற்றை செய்துகொடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் வந்ததால் அதிக நேரம் வீட்டிலிருக்க, இதில் நிறைய கைவினைப்பொருட்களை தயாரித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது தோழிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கற்றுக்கொடுத்துள்ளார்.

அவர்களும் தற்போது கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர். இவ்வாறு செய்யப்பட்ட பொருட்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்க, அதனை வாங்குவதற்கு பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கிடைக்கும் பணத்தைக் கொண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தப்போவதாக பாலமீனாட்சியும், அவரது தோழிகளும் தெரிவித்துள்ளனர்.