டிரெண்டிங்

“அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை” - ராஜன் செல்லப்பா போர்க்கொடி

“அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை” - ராஜன் செல்லப்பா போர்க்கொடி

webteam

அதிமுகவுக்கு ஒரே தலைமைத் தேவை என மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 

மதுரை எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் முடிந்து ஏறக்குறைய 3 வாரங்கள ஆகிவிட்டன. ஆனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று நன்றி செலுத்தியுள்ளார். 

ஆனால் வெற்றி பெற்ற 9 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் ஜெயலலிதா சமாதிக்கு சென்று வெற்றியை சமர்ப்பிக்கவில்லை. இது அவர்கள் குற்றமா? அல்லது தலைமை குற்றமா? அவர்களை தடுப்பது யார்? இதுபோன்ற சின்னச் சின்ன நெருடல்கள் அதிமுகவை வீழ்த்திவிடுமோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. எம்.எல்.ஏக்கள் அதிமுகவை விட்டு ஒருவர் கூட வெளியே செல்லமாட்டார்கள். 

அதிமுகவுக்கு ஒரே தலைமைத் தேவை. இரட்டை தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஒருவர் தலைமையில் கட்டுப்பாட்டுடன் கொண்டுசெல்ல வேண்டும். பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜெயலலிதாவினால் அதிகம் அடையாளம் காணப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். தினகரன் என்ற மாயை முடிந்துவிட்டது. இரட்டை தலைமை இருப்பதால் உடனுக்குடன் முடிவு எடுக்க முடியவில்லை என்பதை கண்கூடாக பார்க்கிறோம். ஜானகிக்குப் பிறகு ஜெயலலிதாவைப் போல அதிமுக தொண்டர்களுடன் இன்னும் யாரும் நெருங்கவில்லை. தலைவர் யார் என்பதை அதிமுக பொதுக்குழுவில் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார். 

இதுகுறித்து கருத்து கேட்டதற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ராஜன் செல்லப்பாவின் பேட்டியை முழுமையாக பார்த்தபிறகு பதில் சொல்வதாக தெரிவித்துள்ளனர்.