இந்து தீவிரவாதம் என்று எழுதிய விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வார இதழில் ஒன்றில் இந்து தீவிரவாதம் என கமல் எழுதியது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியது. கமலின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்து தீவிரவாதம் என்று கூறிய கமலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு இடங்களில் காவல்நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. விஷ்வ இந்து பரிஷத் கட்சி சார்பில் கமலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதேபோல், இந்து தீவிரவாதம் தொடர்பாக கமல் கருத்தினை எதிர்த்து தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, கமல் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யலாம் என சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.