பாஜக தலைவரும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சருமான இமார்தி தேவி முகக்கவசத்தை தூக்கி எறியும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன, அவரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமையன்று பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கினார்கள். அப்போது அவ்வழியாக காரில் வந்த பாஜக தலைவர் இமார்தி தேவிக்கும் முகக்கவசத்தை கொடுத்தார்கள், அதனை பெற்றுக்கொண்ட அவர், கார் ஜன்னல் வழியாக முகக்கவசத்தை தூக்கி எறியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் தற்போது கட்டாய முகக்கவசம் அணியும் உத்தரவு அமலில் உள்ளது. மேலும், முகக்கவசம் இல்லாமல் சுற்றித் திரிபவர்களுக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் 55,000 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், சமீபத்திய வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் முகக்கவசம் அணியாததற்கான அபராதத் தொகையை அதிகரிக்க மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் நரோட்டம் மிஸ்ரா இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். கொரோனா விதிகளை மீறுவோருக்கான திறந்தவெளி சிறைகளை அமைப்பது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் ஆளும் கட்சியை சேர்ந்த தலைவரே முகக்கவசத்தை தூக்கி எறியும் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.