டிரெண்டிங்

பல்லவன் இல்லத்தை அடமானம் வைத்தது திமுக ஆட்சியில்தான்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பல்லவன் இல்லத்தை அடமானம் வைத்தது திமுக ஆட்சியில்தான்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

webteam

திமுக ஆட்சியில் புதியதாக திறக்கப்பட்ட பணிமனைகள் 10 மட்டும்தான் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்களை சூறையாடி, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அதிமுக அரசு தடைக்கல்லாக இருப்பதாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

 அரசுப் போக்குவரத்துக்கழக சொத்துகள் அடமானம் வைக்கப்பட்டிருப்பதாக புதியதலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், இதுதொடர்பான அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். 
அதில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கட்டடங்கள், பேருந்துகள், பணிமனைகள் உள்ளிட்டவற்றை 2,453 கோடி ரூபாய்க்கு அடகு வைத்து, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிர்வகிக்கப்பட்டு வருவதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும் இந்த நிலை நீடித்தால் தலைமைச் செயலகத்தையே மத்திய அரசுக்குத் தெரியாமல் அதிமுக அரசு அடகு வைத்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும் ஸ்டாலின் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் “பல்லவன் இல்லத்தை வங்களில் 30.50 கோடிக்கு அடமானம் வைத்தது திமுக ஆட்சியில்தான்.பல்லவன் இல்லம் மட்டுமின்றி மேலும் 6 இடங்கள் திமுக ஆட்சியில் அடமானம் வைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் புதியதாக திறக்கப்பட்ட பணிமனைகள் 10 மட்டுமே. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களுக்கு 10.513 கோடி நிதி தரப்பட்டது. பணிமனை பராமரிப்புக்காக மட்டுமே 53 விருதுகளைப் பெற்றுள்ளோம். 2011ஆம் ஆண்டு முதல் 1.231 கோடி கடன் நிலுவை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.