டிரெண்டிங்

கருணாநிதி பெயர் நீக்கம் - ஸ்டாலின் கண்டனம்

rajakannan

சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரி அருகில் ரூ. 2.80 கோடி செலவில் மணி மண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டு தற்போது திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த விழாவில் கலந்து கொண்டு சிவாஜி சிலையை அக்டோபர் 1ஆம் தேதி காலை 10.30 மணியளவில் திறந்து வைப்பார் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கலந்து கொள்ளாதது குறித்து நடிகர் பிரபு வருத்தம் தெரிவித்து இருந்தார். பின்னர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், “திரையுலகத்தையும், சிவாஜி கணேசன் ரசிகர்களையும் அவமானப்படுத்தும் செயல் இது. அரசியல் விளையாட்டுகளால் மன்னிக்க முடியாத துரோகத்தை முதலமைச்சர் செய்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை திரையுலகம் ஒருபோதும் மன்னிக்காது” என்று கூறியுள்ளார்.

மெரினா கடற்கடையில் உள்ள ஐ.ஜி. அலுவலகத்திற்கு அருகில் இருந்த சிவாஜி சிலையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்துவைத்தார். அதனால் அந்தச் சிலையின் பீடத்தில் கருணாநிதியின் பெயர் இடம் பெற்றிருந்தது. பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்தச் சிலை அகற்றப்பட்டது. தற்போது சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள சிவாஜி மணிமண்டபத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது, மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி சிலையின் பீடத்தில் இருந்து கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டுள்ளது.