காங்கிரஸ் கட்சி 38 பேர் கொண்ட 8 வது வேட்பாளர் பட்டியலை நேற்றிரவு வெளியிட்டது. மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகாவில் மீண்டும் போட்டியிடுகிறார்.
17 வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கி ரஸ் கட்சிகள் சில தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.
(மல்லிகார்ஜூன கார்கே)
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 38 பேர் கொண்ட 8வது வேட்பாளர் பட்டியலை நேற்றிரவு வெளியிட்டது. இதில் கர்நாடகாவின் குல்பர்காவில் போட்டியிட, அக்கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதே போல் மகாராஷ்டி ராவின் முன்னாள் முதல்வர் அசோக் சவான், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
(திக் விஜய் சிங்)
உத்தராகண்ட் மாநிலத்தில் மணிஷ் கந்தூரிக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் பாஜகவில் இருந்து விலகி ராகுல் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். இதே போல் முன்னாள் மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி, கே.எம்.முனியப்பா ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வெளியிட்ட இந்த எட்டாவது பட்டியலில், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவை தேர்தலுக்கு, இதுவரை 218 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.