டிரெண்டிங்

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

Sinekadhara

7 உட்பிரிவு சாதியினரை தேவேந்திரகுல வேளாளர் என அழைக்க வழிவகுக்கும் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று தமிழகத்திற்கான ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவானது குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடும்பம், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கப்படவேண்டும் என்ற மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெற்றதையடுத்து மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவுள்ளது. பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும் எனவும், மற்றபடி பட்டியலின சலுகைகள் தொடரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்டநாள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தார். மேலும் தனது பெயர் ’நரேந்திர’ போன்றே ’தேவேந்திர’ என்ற பெயரும் ஒரே ராகத்தில் இருப்பதாகவும் அவர் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டு பேசியிருந்தார். தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த மசோதா அரசியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.