டிரெண்டிங்

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் 14ம் தேதி ஆஜராக உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் 14ம் தேதி ஆஜராக உத்தரவு

webteam

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீண்டும் இம்மாதம் 14ஆம்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உரிய காலத்தில்‌ உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாணையி‌ன் போது செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு நவம்பர் 17ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனால் செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் அறிவிப்பு வெளியிடாததை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தமிழக அரசு மீதும், மாநில தேர்தல் ஆணையம் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான்‌‌, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். அப்போது ஒரு வருடமாக உள்ளாட்சி தேர்தலை ‌நடத்தாமல் இழுத்தடிக்கும் இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும் என திமுக தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகிய இருவரும் ஆஜராகி விட்டதால் இனி நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் இரு‌வரையும் நவம்பர் 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.