டிரெண்டிங்

”கால்வாய் வெட்டித்தரும்வரை வாக்களிக்க மாட்டோம்” வீடுகளில் கருப்புக்கொடி கட்டிய கிராமமக்கள்

kaleelrahman

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள நெட்டவேலம்பட்டியில் வீடுகளில் கருப்புக் கொடிகட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறையூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நெட்டவேலம்பட்டியில் சுமார் 1300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 3000 மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், இப்பகுதியில் உள்ள அனைவருமே விவசாயத்தை நம்பி வாழக்கூடியவர்கள். அத்துடன் கறவை மாடுகளும் வளர்த்து வருகின்றனர்.

கொல்லிமலையில் இருந்து உற்பத்தியாகும் புளியஞ்சோலை ஆற்றின் வழியாக செல்லும் மழைநீரை அனைத்து பகுதி மக்களும் பயன்படுத்தியது போக மீதமுள்ள உபரிநீர் காவிரி ஆற்றில் கலந்து கடலுக்கு வீணாக செல்கிறது, அவ்வாறு வீணாக செல்லும் உபரி நீரை நெட்டவேலம்பட்டி யில் உள்ள பெரிய ஏரி, சின்ன குட்டைகள், தேங்கராயன்குட்டை, வில்லாங்குட்டை, சிக்கென்ன குட்டை ஆகிய இடங்களுக்கு கால்வாய் அமைத்து நீர்வரத்து வந்தால் குடிநீர் பஞ்சம் நீங்கும்.

1200 ஏக்கர் நஞ்சை விவசாயம் செய்ய வாய்ப்பாக அமையும் என தமிழக அரசுக்கு புகார் மனு அளித்து 2003ஆம் ஆண்டு மாவட்ட பொதுப்பணித் துறை பொறியாளர் மூலம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணி தொடங்காமல் நின்றுவிட்டது. இந்நிலையில் தற்போதைய முதல்வர் பழனிசாமி பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது 2016 மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது புளியஞ்சோலை ஆற்றிலிருந்து பெரிய ஏரி மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து கால்வாய் வெட்டித்தரும் வரை நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என வீடுகளுக்கு முன்பு கறுப்புக்கொடி கட்டி தேர்தலை புறக்கணிக்க பேவதாக கூறினார்கள்.