டிரெண்டிங்

ஐபிஎல்லில் கலக்கும் இடது கை பேட்ஸ்மேன்கள்..!

ஐபிஎல்லில் கலக்கும் இடது கை பேட்ஸ்மேன்கள்..!

jagadeesh

டப்பு ஐபிஎல் சீசனில் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திரங்கள் சிலர் ஏமாற்றமளித்துள்ள நிலையில், பெரியளவில் அறியப்படாமல் இருந்த சில வீரர்கள் தங்களுக்கான அடையாளத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளனர்.

தேவ்தத் படிக்கல், 20 வயதே நிரம்பிய இந்த இடது கை பேட்டிங் இளங்கன்று பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடியுள்ள படிக்கல், அனுபவ வீரர் பார்த்தீப் படேலுக்கு பதிலாக ஓபனிங் பொறுப்புடன் அறிமுகம் செய்யப்பட்டார். பந்துவீச்சில் பலம் வாய்ந்த ஹைதராபாத் அணிக்கு எதிராக அரைசதம் கடந்து முதல் போட்டியிலேயே அசத்தினார் படிக்கல்.

மும்பைக்கு எதிரான போட்டியிலும் தனது அரைசதத்தின் மூலம் அணிக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ரசிகர்களால் அடுத்த யுவராஜ் சிங் என்று புகழப்படும் அளவிற்கு நேர்த்தியான ஆட்டத்தினை அமர்க்களப்படுத்தி வருகிறார் படிக்கல்.

ஐபிஎல் வரலாற்றில் எளிதில் மறந்து விட முடியாத ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார் ராகுல் திவேதியா.. ரசிகர்களை இருக்கையின் நுணியில் அமர வைத்த, பரபரப்பு பற்ற வைத்த பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், எதிர்கொண்ட முதல் 19 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தார் திவேதியா.

ஒரு கட்டத்தில் இவரை நம்பி STRIKE ஐ கூட மாற்றாமல் ரன் ஓடுவதை தவிர்த்தார் சாம்சன். அணியை தோல்வியில் தள்ளிவிட்டார் என வசை பாடியவர்களுக்கு, தன்னம்பிக்கையே துணை என வீரு கொண்டு காட்ரெல் வீசிய ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கும் வித்திட்டார். பஞ்சாப், டெல்லி அணிகளில் விளையாடிய போது பந்துவீச்சாளாராக மட்டுமே களம் கண்ட திவேதியா, நடப்பு சீசனில் பேட்டிங்கிலும் தன்னை நிரூபித்து அசத்தியுள்ளார்.

ஆர்.சி.பி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் முத்திரை பதித்து ரசிகர்கள் மனதில் அச்சாரமிட்டுள்ளார் மும்பையின் இஷான் கிஷன். மூத்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், நடப்பு சீசனில் களமிறக்கப்பட்ட முதல் போட்டியிலேயே பெரிய இலக்கின் பொறுப்பை தோளில் தூக்கி சுமந்தார் கிஷன். அணியை வெற்றியின் வாசல் வரை அழைத்துச் சென்ற கிஷன், 99 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் தவறினாலும் சரித்திரம் படைக்கும் இன்னிங்ஸை பதிவு செய்துள்ளார் இஷான் கிஷன்.

ஜாம்பவான்களாக போற்றப்படும் சில வீரர்களே நடப்பு சீசனில் ரன் சேர்க்க திணறி வரும் சூழலில், தங்களுக்கான அடையாளத்தை அழுத்தமாக பதிவு செய்துவிட்டனர் இந்த இடது கை பேட்டிங் மைந்தர்கள்.