டிரெண்டிங்

கூடுதலாக மொழியை கற்க மாணவர்களை தயார் படுத்த வேண்டும் - மாநில பாஜக தலைவர்

webteam

கூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்கள் ஆர்வமாக உள்ளதாகவும் அதனை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய கல்வி கொள்கை ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை உலக தரத்திலான கல்வியை வழங்க இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிலையங்கள் என கல்வித்துறையின் அனைத்து பிரிவுகளும் மேம்பட இருக்கின்றன. தாய்மொழிக்கல்வி கட்டாயம் என்பதை அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். புதிய கல்வி தமிழ்நாட்டிற்கு மட்டுமானது அல்ல. ஹிந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மாணவர்கள் கூடுதல் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் சிபிஎஸ்சி, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. கூடுதலான மொழியை கற்கும் வாய்ப்பு அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டும் தான் இழக்கின்றனர். 1968ம், 2020ம் வாழ்வியல் முறையில் பார்க்கும்போது ஒரே முறையில் இருக்கிறதா? காலம் மாறவில்லையா? கருத்துக்கள் மாறவில்லையா?
தமிழக மாணவர்கள் மூன்றாவதாக ஒரு மொழியை , இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பயிலும் வாய்ப்பை பெறுகிற போது, தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழை மூன்றாவது மொழியாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பை நாம் புறக்கணிக்கிறோமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமைய பிரதமர் எடுத்துரைத்து வருகிறார். இந்திய மாணவர்களின், இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சி, உலக அளவில் அவர்களது
மேம்பாட்டுத் திறன், ஆகியவற்றை அதிகரிக்கச் செய்யும் புதிய கல்விக் கொள்கையை மொழிப்பற்றி மட்டுமே பேசி, தடுத்துவிட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.