“திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து போட்டியிடுவது சவால்தான்!” என்று ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குஷ்பு கூறியுள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி குஷ்புவுக்கு ஒதுக்கப்படலாம் என பேசப்பட்டு வந்தது. காரணம், அங்கு குஷ்பு களத்தில் இறங்கி வேலை பார்த்து வந்தார். ஆனால், அத்தொகுதியை பாமகவுக்கு அதிமுக வழங்கியது. இதனால் குஷ்புவின் செயல் வீண் என்றும் பேசப்பட்டது. இதையடுத்து தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி குஷ்புவுக்கு வழங்கப்பட்டுள்ளது. குஷ்புவை எதிர்த்து திமுகவை சேர்ந்த எழிலன் போட்டியிடுகிறார்.
ஏற்கெனவே ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த கு.க. செல்வம் அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். காரணம், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் அந்த தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்தது. அதனால் அதிருப்தியில் இருந்த கு.க.செல்வம் பாஜகவின் தலைவர்களை சந்தித்து சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். ஆனால், தற்போது உதயநிதி ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக குஷ்பு போட்டியிடுவதாக கூறப்பட்ட சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கு.க.செல்வம் தொகுதியில் குஷ்புவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக வேட்பாளர் குஷ்பு கூறுகையில், “பாஜக வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எனக்கு சீட் கொடுப்பார்கள் என நினைக்கவில்லை. பிரசாரம் ஆரம்பித்ததும் என்னென்ன செய்ய போகிறேன் என்று சொல்கிறேன். எழிலனை எதிர்த்து போட்டியிடுவது கண்டிப்பாக சவாலாக இருக்கும். சவால் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் கண்டிப்பாக எனக்கு ஆதரவு தருவார்கள்” எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்து வந்த காலத்தில், திட்டக்குழு உறுப்பினராக இருந்தவர் நாகநாதன். இவரின் மகன்தான் மருத்துவர் எழிலன். சுமார் 10 ஆண்டுகளாக கருணாநிதியின் தனி மருத்துவராக இருந்தவர் எழிலன். தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இவர்தான் தனி மருத்துவர். திருச்சியில் மார்ச் 7-ம் தேதி நடந்த தி.மு.க மாநில மாநாட்டில் மருத்துவம் சார்ந்து எழிலன் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.