குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் உள்ள அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. கார் மற்றும் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற வேட்பாளராக அதிமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் தேர்தல் பணிகளை தனது குடும்பத்தாருடன் கடந்த 3 நாட்களாக செய்து வந்த வேளையில் இன்று குறிஞ்சிப்பாடி தொகுதியில் பழனிச்சாமிக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் நியமிக்கப்படுவதாக அதிமுக அறிவித்திருந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர் பழனிச்சாமி குடும்பத்தினர்.
இந்நிலையில் இன்று பழனிச்சாமி ஆதரவாளர்கள் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள அதிமுக அலுவலகம் மீது திடீரென கற்களை வீசி தாக்கினர். கண்ணாடிகளை அடித்து நொறுக்கி எதிரே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரச்சார ஜீப் மற்றும் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். அதற்குள் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அமைச்சர் எம்.சி சம்பத் ஆதரவாளர்கள், பழனிச்சாமி ஆதரவாளர் வந்த கார் மீது தாக்க முயற்சித்தப்போது பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அங்கு போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீ அபிநவ்யிடம் கேட்டதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்